Categories
உலக செய்திகள்

அனல் மின் நிலையம் மீது தாக்குதல்…. இருளில் மூழ்கிய கிழக்கு உக்ரைன்…. ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்த அதிபர் ஜெலன்ஸ்கி….!!

உக்ரைன் நாட்டில் அனல் மின் நிலையங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவ படைகள்  தாக்குதல் நடத்தியதால் கிழக்கு உக்ரைன் இருளில் மூழ்கியது. 

உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்ய போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்கிற பெயரில் ரஷ்யா தொடங்கிய இந்த போர் 6 மாதங்களை கடந்து நீண்டு கொண்டிருக்கின்றது. போரில் உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷ்ய படைகளின் முயற்சி தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து, ரஷ்ய ராணுவ படைகள் கிழக்கு உக்ரைன் மீது பார்வையை திருப்பியது. ஏற்கனவே கிழக்கு உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், உக்ரைன் வசம் இருந்த பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றியது. இந்த சூழ்நிலையில் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ராணுவ படைகள்  வசம் சென்ற முக்கிய நகரங்களை அண்மையில் உக்ரைன் ராணுவம் மீட்டது. உக்ரைன் வீரர்களை எதிர்த்து சண்டையிட முடியாமல் ரஷ்ய ராணுவ படைகள் அங்கிருந்து பின்வாங்கின. ரஷ்ய ராணுவமும் இதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. இது 6 மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் போரில் மிகப்பெரும் திருப்பு முனையாக அமைந்துள்ளது.

இந்நிலையில் ரஷ்ய ராணுவ படைகள் பின்வாங்கிய விவகாரத்தில் உக்ரைனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிழக்கு கார்கீவ் பிராந்தியத்தில் ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. குறிப்பாக அந்த பிராந்தியத்தில் உள்ள அனல் மின்நிலையங்களை குறிவைத்து ரஷ்ய ராாணுவ படைகள் தாக்குதல் நடத்தின. இதன் காரணமாக உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் உள்பட பல நகரங்கள் முற்றிலுமாக இருளில் மூழ்கின. இதனால் அங்குள்ள மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். இது திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை என ரஷ்யாவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   இது குறித்து ஜெலன்ஸ்கி கூறியதாவது, “ரஷ்ய ராணுவ வீரர்கள் பின்வாங்கிய நிலையில் விரக்தியில் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள அனல் மின் நிலையங்களை குறி வைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் தனது கிராமங்களையும் நகரங்களையும் மீட்டுவருவதைப் பொறுக்க முடியாமல் முக்கிய கட்டமைப்புகளை நோக்கி ஏவுகணைகளை அனுப்புகின்றது. எங்கள் மக்கள் மின்சாரமும், தண்ணீரும் இல்லாமல் தவிக்க வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு” என அவர் கூறினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. திட்டமிட்டு பொதுமக்களை தாக்குவதில்லை என்று ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது.

Categories

Tech |