Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அனுபவம் இருக்கு…! சிஎஸ்கே இந்த 2 பேரை எடுக்கலாம்…. ராபின் உத்தப்பா கருத்து..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த 2 வீரர்களை மினி ஏலத்தில் எடுக்கும் என தான் நினைப்பதாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்..

இந்தியாவில் 16 வது ஐ.பி.எல் தொடர் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த முறை 10 அணிகளுமே உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் விளையாடவுள்ளதால் மிகச் சிறப்பாக இந்த தொடர் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுமட்டுமில்லாமல் இந்த முறை ஐபிஎல் தொடர்களில் சில புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதால் சுவாரசியமாக இருக்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையே இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் கழட்டிவிட்ட வீரர்கள் மற்றும் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து வரும் 16 வது ஐபிஎல் தொடருக்கு முன்பாக டிசம்பர் 23ஆம் தேதி ஐபிஎல் மினி ஏலம் கொச்சியில் நடைபெற இருக்கிறது. இந்த மினி ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தாங்கள் எந்த வீரரை தேர்வு செய்யலாம் என திட்டங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை அணி டுவைன் பிராவோவுக்கு பதிலாக மாற்று வீரரை எடுக்க வேண்டும் என சென்னை அணிக்காக ஆடிய ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்..

இது குறித்த அவர் கூறியதாவது, பிராவோவுக்கு மாற்றாக சென்னை அணி ஒரு சிறந்த ஆல்ரவுண்டரை தேர்வு செய்ய வேண்டும். அதேபோல சிறந்த மிடில் ஆர்டர் இந்திய பேட்ஸ்மேனை தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே அவர்கள் பிராவோவுக்கு பதிலாக சாம் கரனை ஏலத்தில் எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர் ஏற்கனவே சென்னை அணிக்காக ஆடி இருக்கிறார். ஆதலால் சாம்கரனை நிச்சயமாக எடுக்க நினைப்பார்கள். மேலும் ஒரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவும் அவர் இந்திய வீரராக இருக்க வேண்டும். மனிஷ் பாண்டே போன்ற ஒருவரை சென்னை அணி எடுக்க வேண்டும். ஐபிஎல்லில் அதிக போட்டிகளில் ஆடிய அனுபவம் மனிஷ் பாண்டேவிடம் இருக்கிறது.

சென்னை அணி அனுபவம் வாய்ந்த வீரரை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டும் என்பதால் மணிஷ் பாண்டே அதற்கு சரியான தேர்வாக இருப்பார். இந்த 2 பேர்களை தேர்வு செய்ய சென்னை அணி நிச்சயமாக ஆர்வம் காட்டும். ஒருவேளை இந்த வீரர்கள் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் நிச்சயம் மாற்று வழியை வைத்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார். ராபின் உத்தப்பா ஐபிஎல்லில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிக்காக ஆடியுள்ளார். அவர் ஆடிய 2 அணிகளுமே கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |