அனுமதி பெறாமல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் ஜெய்பீம் புரட்சி புலிகள் அமைப்பை சேர்ந்த 18 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆண்டிபட்டி பகுதியில் பஞ்சமி நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சொந்த வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட குழு உறுப்பினர் ஹஜ்முகமது தலைமை தாங்கியுள்ளார்.
இதனையடுத்து ஜெய்பீம் புரட்சிப் புலிகள் அமைப்பினர் சார்பில் நிலக்கோட்டை பகுதியில் 70 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு அரசின் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு பொதுச்செயலாளர் அருந்தமிழ் அரசு தலைமையில் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இதேபோல் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் ஜெய்பீம் புரட்சி புலிகள் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் காவல்துறையினரிடம் அனுமதி பெறாமலும், சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனால் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 10 பேர், ஜெய்பீம் புரட்சிப்புலிகள் அமைப்பை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 18 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.