அரசு இடங்களில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டுவது சட்ட விரோதம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
அரசு இடங்களில் உரிய அனுமதி இன்றி மரங்களை வெட்ட அனுமதிக்க கூடாது, அவ்வாறு யாரேனும் மரங்களை வெட்டினால் அதனை சட்டவிரோதமாக கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டுள்ளது..
புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் முறையான அனுமதி இன்றி மரங்களை வெட்டி அவற்றை விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வழக்கு தாக்கல் செய்தார்.. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீசுவர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி சந்திரசேகரன் அமர்வு, இந்த வழக்கை பொறுத்தவரை சட்டவிரோதமாக அரசு புறம்போக்கு நிலத்திலிருந்து மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அரசு தரப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலின் போது வேரோடு சாய்ந்த மரங்களையும், மின் ஒயர்கள் மீது சாய்ந்த மரங்களையும் கிராமத்தினர் அகற்றி உள்ளனர்.. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.. தற்போது அந்த பகுதியில் அனுமதி இன்றி யாரும் மரத்தை வெட்டவில்லை என தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் சட்ட விரோதமாக மரத்தை வெட்டியவர்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது தெரிய வருகிறது. இனிவரும் காலங்களிலும் அரசின் நிலங்களில் உரிய அனுமதி இன்றி மரங்களை வெட்ட அனுமதிக்க கூடாது அவ்வாறு யாரேனும் வெட்டினால் அதனை சட்ட விரோதமாக கருதி உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்..