திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் அனுமதியில்லாமல் பொக்லைன் இயந்திரத்தை இயக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பின்னரே பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் அனுமதியின்றி கொடைக்கானல் மலைப்பகுதியான தாண்டிக்குடியில் பொக்லைன் இயந்திரம் இயக்கப்படுவதாக புகார் வந்துள்ளது. இது குறித்து தாண்டிக்குடி கிராம நிர்வாக அலுவலர் சேதுமணி, கொடைக்கானல் தாசில்தார் சந்திரன் ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனுமதி இல்லாமல் மலைப்பகுதியில் இயக்கப்பட்ட பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பொக்லைன் இயந்திரத்தை இயக்கிய டிரைவர் பாஸ்கரன் மற்றும் காமேஸ்வரன், நில உரிமையாளர் சியாம்குமார் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து வருவாய்த்துறையினர் அவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளனர்.