அனுமதி இன்றி செயல்பட்டு வந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் அபி பில்டிங் மெட்டீரியல் சப்ளையர்ஸ் என்ற கட்டுமான உபயோகப் பொருட்களை வாடகைக்கு விடும் கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு எல்லா நேரத்திலும் பொருட்களை ஏற்றுவதற்கு அதிக அளவில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் வந்து கொண்டே இருக்கும். மேலும் உபகரணங்களை ஏற்றிச்செல்லும் போது வாகனத்தில் இருந்து ஒரு சில நேரத்தில் இரும்பு தட்டுகள் வழியில் வந்து விழும்.
இது அப்பகுதி மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக அனுமதி இன்றி செயல்படும் இந்த கடையை மூடும்படி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் அந்த கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் கடையை மூடி சீல் வைத்துள்ளனர்.