சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அனுமதியில்லாமல் மஞ்சுவிரட்டு நடத்தி கொண்டிருந்த மாடுபிடி வீரர்கள் காவல்துறையினரை கண்டதும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டியில் சிறப்பு வாய்ந்த பூங்குன்றநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு அனுமதியின்றி நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதன் பிறகு நூற்றுக்கணக்கான காளை மாட்டினை உரிமையாளர்கள் கோவில்பட்டி வயல் பகுதியில் கட்டுமாடுகளாக அவிழ்த்து விட்டனர். அதில் மாடுபிடி வீரர்கள் ஏராளமான மாடுகளை பிடித்தனர். இந்நிலையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினரை கண்டதும் மாடுபிடி வீரர்கள் மற்றும் அங்கு நின்றுகொண்டிருந்த திரளான கிராம மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.