அனுமதி இல்லாத கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெறுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் (டிடிபிசி) எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 2011-ம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 2018-ம் ஆண்டில் வெளியிடப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மீண்டும் ஆறு மாத காலம் கால நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tn.gov.in/tcp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.