டெல்லியிலுள்ள ஜஹாங்கீர்புரியில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இருபிரிவினர் இடையே தகராறு நிலவியபோது பலபேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக டெல்லி காவல்துறை ஆணையர் உட்பட உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அவர் உத்தரவு பிறப்பித்தார். இந்த வன்முறை தொடர்பாக விசாரிக்க 10பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவி பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில் தேசிய தலைநகரில் நடைபெற்ற வன்முறை மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானது எனவும் இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் இருப்பவர்கள் தப்பிக்க முடியாது எனவும் டெல்லி துணை நிலை ஆளுனர் அனில் பைஜால் தெரிவித்து உள்ளார். இதற்கிடையில் மக்கள் அமைதி காக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். அமைதி இன்றி நாடு முன்னேற முடியாது என தெரிவித்துள்ள அந்நாட்டு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தலைநகரில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜஹாங்கீர்புரியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் இருதரப்பு குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்ட முயற்சி எடுக்கப்பட்டு உள்ளதாகவும் டெல்லி சட்டஒழுங்கு சிறப்பு காவல் ஆணையர் டிபேந்திர பதக் தெரிவித்துள்ளார். மேலும் நிலைமையைக் கட்டுப்படுத்த போதுமான காவல்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.