அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி பதவியேற்ற பின் அந்த கட்சி 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது. ஒரு புறம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை இபிஎஸ் நீக்க, மற்றொரு புறம் இபிஎஸ், அவரது ஆதரவாளர்களை ஓபிஎஸ் நீக்குகிறார். இதன் காரணமாக அந்த கட்சித்தொண்டர்கள் குழப்பமடைந்து இருக்கின்றனர். இவ்வாறு இருக்க வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கைகள் தொடங்கி இருக்கிறது. போலி வாக்காளர்களை கண்டுபிடிக்கும் அடிப்படையில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்த விரிவான ஆலோசனையை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தலைமையில் சென்னையில் இன்றுகாலை 11 மணிக்கு துவங்கியது. இவற்றில் பங்கேற்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதனிடையில் 2 அணிகளாக செயல்படும் அதிமுக-விலிருந்து யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. எனினும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாக, உடனே ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில் தங்கள் தரப்பு பிரதிநிதியாக கோவை செல்வராஜ் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதே நேரம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் போன்றோர் கலந்துகொள்வார்கள் என இபிஎஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இன்று நடந்த கூட்டத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது கோவை செல்வராஜ் (ஓபிஎஸ் தரப்பு) முன்னதாகவே வந்து அதிமுக-வுக்கு என்று போடப்பட்டிருந்த 3 இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்தார். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு நேராக அ.தி.மு.க பெயர் பலகை இருந்தது. அதன்பின் செல்வராஜுக்கு அடுத்ததாக வந்த ஜெயக்குமாரும், ஜெயராமனும் மீதமிருக்கும் 2 இருக்கைகளில் அமர்ந்தனர்.
இந்த நிலையில் செல்வராஜுக்கு நேராக அதிமுக பெயர் பலகை இருந்ததை கவனித்த ஜெயக்குமார், அப்பலகையை தன் இருக்கைக்கு நேராக வைத்துக் கொண்டார். இதனைப் பார்த்த செல்வராஜ் எதிர்ப்பு எதையும் காட்டவில்லை. அதனை தொடர்ந்து கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார் “அதிமுக சார்பாக அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோம். கோவை செல்வராஜ் எந்த கட்சியை சேர்ந்தவர் என்று தேர்தல் ஆணையத்திடம்தான் கேட்க வேண்டும். அ.தி.மு.க என்றால் நாங்கள் தான். அதை எல்லாம் சீரியசா எடுத்துக்காதீங்க” என்று அவர் கூறினார்.