ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு குறைவான ஊதியம் வழங்கி வருவது சிறிதும் அறமற்ற செயலாகும். ஆட்சிக்கு வந்தவுடன் சம ஊதியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அதற்கு முன் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதை விட 3000 ரூபாய் அளவிற்கு குறைவானதாக அடிப்படை ஊதியத்தை வழங்க முடிவெடுத்தது ஐயா கருணாநிதி அவர்கள் தலைமையிலான அன்றைய திமுக அரசு. அடிப்படை ஊதியம் குறைவானதன் விளைவாக மொத்த ஊதியமானது ரூபாய் 15,000 அளவிற்கு இன்றளவும் குறைவாக வழங்கப்படுகிறது. அதன்பின் 10 ஆண்டு காலம் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசும் இடைநிலை ஆசிரியர் இடையே நிலவும் ஊதிய முரண்பாட்டை களைய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரே அரசின் நிர்வாகத்தின் கீழ் ஒரே வகையான பணி புரியும் ஆசிரியர் பெருமக்களில் குறிப்பிட்ட ஒரு பகுதினருக்கு மட்டும் குறைவான ஊதியம் வழங்குவது எவ்வகையில் நியாயமானதாகும்.
கடந்த 13 ஆண்டிற்கு மேலாக தொடரும் இரு திராவிட கட்சிகளினது அரசுகளின் இத்தகைய பணியாளர் விரோதப் போக்கிற்கு எதிராக இடைநிலை ஆசிரிய பெருமக்கள் பல்வேறு அறவழி போராட்டங்களை முன்னெடுத்தும் இன்று வரை அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்பது பெருங்கொடுமையாகும். ஆசிரியப் பெருமக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்களின் உரிமை போராட்டத்தில் தோள் கொடுத்து துணை நிற்கும் விதமாக கடந்த 26. 4. 2018 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள மகளிர் பள்ளி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடைநிலை ஆசிரியர் பெருமக்களை நேரில் சந்தித்து அவர்களின் போராட்ட கோரிக்கைகளுக்கு ஆதரவளித்தேன்.
அதன் பின்னர் அன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கிய பரிந்துரை கடிதத்தை ஏற்று அப்போராட்டம் தற்காலிகமாக திரும்ப பெறப்பட்ட போதிலும், எட்டு மாதங்களைக் கடந்தும் எவ்வித தீர்வும் வழங்கப்படாத நிலையில் மீண்டும் 27.12. 2018 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் ஆசிரிய பெருமக்கள் முன்னெடுத்த அறவழிப் போராட்டத்திலும் நேரில் பங்கேற்று ஆதரவளித்தேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஐயா ஸ்டாலின் அவர்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்ததும் அதே கோரிக்கையை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்ததையும் நம்பி ஆசிரிய பெருமக்கள் தங்களது முழுமையான ஆதரவினை அளித்து திமுகவினை ஆட்சியில் அமர்த்தினர்.
ஆனால் ஆட்சி பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியும் தேர்தல் வாக்குறுதி படி இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து அவர்களுக்கு சம ஊதியம் வழங்காமல் திமுக அரசு ஏமாற்றி வருவது ஆசிரியர் பெருமக்களுக்கு செய்கின்ற பச்சை துரோகமாகும்.
ஆகவே நாட்டின் வருங்கால தலைமுறையை செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர்களிடையே நிலவும் ஊதிய பாகுபாட்டை களைந்து உடனடியாக அனைத்து இடைநிலை ஆசிரிய பெருமக்களுக்கும் சம ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும்!https://t.co/IZWTFF1Kfb@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/c2PlTMmCXp
— சீமான் (@SeemanOfficial) December 29, 2022