அரை நிர்வாண கோலத்தில் சமூக ஆர்வலர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் குமாரகுப்பம் பகுதியில் சமூக ஆர்வலரான பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு பொங்கல் பானை, விறகு, கரும்பு ஆகியவற்றை வைத்து அரை நிர்வாண கோலத்தில் பிரகாஷ் பொங்கல் வைக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் பிரகாஷை தடுத்து நிறுத்தி பொங்கல் மண்பானையை கொண்டு சென்றுள்ளனர். அதன் பின்னர் பிரகாஷ் எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பிரகாஷ் கூறும்போது, வளவனூர் பகுதியில் இருக்கும் 2 ரேஷன் கடைகளில் மட்டுமே ஆண்டு தோறும் வழங்கப்படும் இலவச வேட்டி-சேலை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
மற்ற ரேஷன் கடைகளில் வேட்டி-சேலை இன்னும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே மற்ற ரேஷன் கடைகளிலும் வேட்டி-சேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடாத பிரகாஷை காவல்துறையினர் வேனில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.