Categories
மாநில செய்திகள்

“அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும்…. பறந்த முக்கிய எச்சரிக்கை”…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்கள் அனைவருக்கும், டாஸ்மாக் மேலாண் இயக்குனர் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் டாஸ்மாக் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் தெரிவித்துள்ளதாவது: “டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், உயர் ரக எலைட் மதுபான விற்பனை கடைகளில் பில் புத்தகம் மற்றும் தினசரி சிட்டா, சரக்கு இருப்பு, விற்பனை, வரி உள்ளிட்ட 21 பதிவேடுகளை முறையாக தினந்தோறும் பராமரித்து வைத்திருக்க வேண்டும். இதனை ஆய்வு செய்யும்போது, இதில் எந்த ஆவணங்களாவது பராமரிக்கப் படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சமீபத்தில் ‘எலைட்’ மதுபான கடைகளை ஆய்வு செய்த போது பல குறைபாடுகள் இருந்தது. எனவே கிடங்கிலிருந்து மதுபான கடைகளுக்கு புல் அல்லது ஒரு லிட்டர் அளவிலான உயர் ரக மதுபானங்கள் மட்டுமே விற்பனைக்கு அனுப்ப வேண்டும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு எலைட் மதுபானங்களை விற்பனை செய்தால் கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். அதில் மதுபானத்தின் பெயர், அரசு நிர்ணயித்த விலை மற்றும் கடை ஊழியர்களின் கையொப்பம் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.  மதுபானங்கள் விலை பட்டியல் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு தெரியும் படி கட்டாயம் வைக்கப்பட வேண்டும்.

உற்பத்தியாளர்களிடமிருந்தும், மதுபான கிடங்கில் இருந்து பெறப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் மதுபானங்கள் விற்பனை செய்திருக்க வேண்டும். 90 நாட்களுக்கு மேற்பட்ட மதுபானங்கள் இருப்பில் வைத்திருக்க கூடாது. மேலும் மதுபான விற்பனையை பிஓஎஸ் என்ற இயந்திரத்தின் மூலமாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அறிவுரைகளை மீறும் கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனை சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்கள் கண்காணிக்க வேண்டும். இல்லையெனில் மாவட்ட மேலாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |