Categories
உலக செய்திகள்

அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி … ஐ.நா. சபை தலைவர் வேண்டுகோள்…!!!

கொரோனா தடுப்பூசி அனைத்து நாட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என ஐநா சபையின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய பல்வேறு நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதில் சில தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்கும் இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளன. அதனால் தடுப்பூசிகள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கின்ற 193 உறுப்பு நாடுகளின் தூதர்கள் பங்கேற்கும் கூட்டம் பொது சபை அரங்கில் நடந்தது.

அதனையொட்டி ஐநா சபையின் தலைவர் திஜ்ஜான் முகமது பாண்டே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” உலக அளவில் வளரும் நாடுகளில் சுகாதார திட்டங்கள் அனைத்தும் மிக மோசமாக இருப்பதால், அந்நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னேறிய நாடுகளை ஒப்பிடும்போது வளரும் நாடுகளில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறைவாகவே இருக்கின்றது. பணக்கார நாடாக இருந்தாலும் சரி அல்லது ஏழை நாடாக இருந்தாலும் சரி நோய்த்தொற்றை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் பாதிப்புகள் அமைந்துள்ளன. பெரும்பாலான பணக்கார நாடுகளில் சிறந்த சுகாதார வசதிகள் மற்றும் நிதி ஆதாரங்கள் அனைத்தும் இருக்கின்றன.

இருந்தாலும் பெரும்பாலான வளரும் நாடுகள் சுற்றுலா தொழில் மற்றும் எண்ணெய் வளத்தையுமே நம்பியிருக்கிறார்கள். அந்த நாடுகள் அனைத்தும் தற்போது பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. கொரோனா தொற்று உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அதனால் அதனை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து உலகை இயல்பு நிலைக்கு திரும்ப செய்ய வேண்டும். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை மக்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தவுடன் அது அனைத்து நாட்டு மக்களுக்கும் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.

அது மிகவும் முக்கியமாகும். தடுப்பூசி ஏதாவது ஒரு நாட்டிற்கு கிடைக்காமல் போனாலும் இந்த உலகம் தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தலை சந்திக்க நேரிடும். ஏழ்மையில் இருக்கின்ற நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்காமல் போனால் அந்த நாடுகளில் மேலும் பாதிப்பு அதிகரிக்கக்கூடும். அதனால் தடுப்பூசியை தயாரிக்கும் நாடுகள், அனைத்து நாட்டு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டாயம் செயல்பட வேண்டும். இதுதொடர்பாக பல்வேறு நடைமுறைகள் மற்றும் உடன்பாடுகள் உருவாக்கப்படும் என நான் நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |