ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களிலும் மக்கள் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் விதமாக அந்தந்த பண்டிகைகுரிய பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும். இதில் குறிப்பாக தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் செய்வதற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.
இதன் மூலம் சாமானிய மக்கள் தங்களுடைய குடும்பத்தோடு சந்தோஷமாக பண்டிகையை கொண்டாடுவார்கள் . இதுபோன்று மற்ற மாநிலங்களிலும் பண்டிகை காலத்தில் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் மகராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் தீபாவளியை முன்னிட்டு மாநிலத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 100 மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்க உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு கிலோ ரவை, நிலக்கடலை, சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் இடம் பெற்றிருக்கும். தீபாவளி பண்டிகை வருவதற்கு இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டுமே உள்ளதால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.