நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜனவரி 31-ஆம் தேதி வரை 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 10 ,11 ,12- ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்று மும்பை மாநகராட்சி அறிவித்திருந்தது.
இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஜனவரி 24- முதல் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் ஜனவரி 24-ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்க நாங்கள் வைத்த கோரிக்கைக்கு முதல்வர் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் ஜனவரி 24 -முதல் மழலையர் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.