தினேஷ் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவால் ஓய்வை அறிவிக்க போகிறாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்..
சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார் தினேஷ் கார்த்திக். 2022 ஐ பி எல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் சிறப்பாக பினிஷிங் ரோலில் கலக்கியதால் இந்திய அணியில் இடம் பிடித்தார். ஐபிஎல் தொடருக்குப்பின் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்ற தினேஷ் கார்த்திக் சிறப்பாகவே ஆடி வந்தார்.. இதன் காரணமாக அவர் உலக கோப்பை தொடரிலும் இடம் பிடித்தார்.. ஆனால் இந்த உலகக் கோப்பை தொடர் அவருக்கு சரியாக அமையவில்லை என்று தான் சொல்லவேண்டும்.. கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தவில்லை.. எதிர்பார்த்த அளவுக்கு அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோற்று வெளியேறியது. இந்திய அணி அடுத்ததாக நியூஸிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. உலக கோப்பைக்கு பின் தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, ஒரு கருத்தையும் பதிவு செய்துள்ளார்.
அதில், இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பையை விளையாட வேண்டும் என்ற இலக்கை நோக்கி கடுமையாக உழைத்தேன், அவ்வாறு செய்வது மிகவும் பெருமையான உணர்வு… இறுதி நோக்கத்தில் நாங்கள் தவறிவிட்டோம், ஆனால் அது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத பல நினைவுகளை தந்துள்ளது. எனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள், நண்பர்கள் மற்றும் மிக முக்கியமாக ரசிகர்களுக்கு தீராத ஆதரவிற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்..
இந்தப் பதிவை கண்ட ரசிகர்கள் அனைவரும் ஒருவேளை தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்து விட்டாரா என்ற குழப்பத்திலேயே இருக்கின்றனர்.. சமீபத்தில் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்பட இருப்பதாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், தற்போது இவ்வாறு பதிவு செய்திருப்பது ஓய்வை தான் அறிவிக்கப் போகிறார் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுகிறது.. இந்திய அணிக்காக தினேஷ் கார்த்திக் இதுவரையில் 26 டெஸ்ட் போட்டி 94 ஒரு நாள் போட்டி மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..