உத்தரகாண்டில் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியைத் தொடர்ந்து அண்டை மாநிலமான பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி வியூகம் வகுத்து வருகிறது. அங்கு தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. கேப்டன் அமரீந்தர் சிங் முதல்வராக இருக்கிறார். விரைவில் அம்மாநிலம் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் அர்விந்த் கேஜ்ரிவால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு மிகப்பெரிய வாக்குறுதிகளை அளித்திருக்கிறார். 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், முந்தைய நிலுவை மின்சாரக் கட்டணங்களில் சலுகை உள்ளிட்ட சலுகைகளை அறிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட திட்டமிட்டுள்ள அவர் அங்கும் இலவச மின்சாரம் தொடர்பாக வாக்குறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து கேஜ்ரிவால் கூறியதாவது, உத்தரகாண்டில் மாறி மாறி ஆட்சி செய்த பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மக்களுக்கு எந்த உருப்படியான திட்டத்தை செய்யவில்லை. மாநிலத்தை கொள்ளை அடிக்கவே திட்டங்களை உருவாக்கினர்.
உத்தரகாண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம். விவசாயிகள் இலவச மின்சாரம் பெறலாம். நிலுலையில் உள்ள பாக்கித்தொகை தள்ளுபடி செய்யப்படும். 24 மணி மின்சாரம் வழங்க சற்று நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் நாங்கள் அதை செய்வோம் என்று அவர் கூறினார்.