தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் இந்து கோயில்களில் சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில கோயில்களில் பெயரளவில் மட்டும் தமிழ் மொழியில் அர்ச்சனை நடைபெறுகிறது.
இதனால், தொன்மையான தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வந்தன. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னை தமிழ் அர்ச்சனை திட்டத்தின் அறிவிப்பு பலகையை வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். இன்று முதல் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 47 திருக்கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது. இதன்மூலம் திருக்கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, அர்ச்சகர்களின் பெயர், தொலைபேசி எண் பக்தர்களுக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.