Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அன்புதான் காதல்: பெற்றோருக்குப் பாத பூஜை செய்த பள்ளி மாணவியர்

காதலர் தினத்தை முன்னிட்டு, பெற்றோர்களிடம் அன்பு செலுத்தும் விதமாக பள்ளி மாணவ-மாணவிகள் பாத பூஜை செய்தனர்.

உலகம் முழுவதும் இன்று காதலர்கள் தினம் கொண்டாடும் நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் – மயிலாடுதுறையில் பள்ளி மாணவ- மாணவிகள் காதலர் தினத்தை பெற்றோர்களிடம் அன்பு செலுத்தும் விதமாக, பாதபூஜை செய்து வழிபட்டனர்.

பிப்ரவரி 14ஆம் தேதியை காதலர் தினமாக காதலர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். காதலர் தினத்தால் பண்பும் கலாசாரமும் பாதிக்காமல் சிறந்த இளைஞர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கூறி, காதலர் தினத்திற்கு பல்வேறு அமைப்புகளால் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காதலர் தினமான இன்று மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில், இன்று பெற்றோர்களுக்குப் பாதபூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள், பெற்றோர்களை வாழை இலை மேல் நிற்க வைத்து, பாதங்களை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் இட்டு, அதன் பிறகு அட்சதை தூவி, தீபங்கள் காட்டி பாதபூஜை செய்து வழிபாடு செய்தனர்.

காதலர் தினம் என்பது அன்பை வெளிப்படுத்தும் நாள் என்றும், பெற்றோர்களிடம் மாணவர்கள் காதல் என்ற அன்பை செலுத்தி வணங்க வேண்டும் என்றும், பெற்றோர்களை மதித்து நடந்தாலே கல்வி உள்ளிட்ட அனைத்து நற்பண்புகளும் தானாகவே கிடைக்கும் என்றும் மாணவர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

தங்களுடைய பெற்றோர்கள் மீது, தங்களுடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக பாதபூஜை செய்ததாகவும், இதனால், அவர்களுடைய ஆசி தங்களுக்கு கிடைக்கும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர். இது குறித்து பெற்றோர்கள் கூறும்போது, இளமைக்காலத்தில், மனதை அலைபாயவிடாமல், இதுபோல் பெற்றோரை வணங்குவதால், தங்கள் குழந்தைகள் நல்வழியில் நடப்பதாக பெருமிதம் தெரிவித்தனர்.

Categories

Tech |