Categories
லைப் ஸ்டைல்

அன்றாட வாழ்வில் தினமும் எழுந்ததும் செய்ய கூடியவை, செய்ய கூடாதவை பற்றி அறிவோம்..!!

காலையில் எழுந்ததும் நாம் அன்றாட வாழ்வில் தினமும் செய்யவேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றி பார்ப்போம்.

காலையில் எழுந்தவுடன் நீங்கள் கடைப்பிடிக்கும் சில பழக்க வழக்கங்கள் அந்த நாளை நல்லவிதமாக செலவிட வழிவகை செய்யும். நேர்மறையான எண்ணங்களையும், அமைதியான மன நிலையையும் ஏற்படுத்தி பரபரப்பான வாழ்க்கை சூழலை சமாளிக்கவும் உதவும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்!

செய்ய கூடாதவை:

இது ஸ்மார்ட்போன் யுகம். இரவில் தூங்க செல்லும்போதும், காலையில் கண்  விழித்த உடனேயும் செல்போனில் நேரத்தை செலவிடுபவர்கள் தான் இங்கு அதிகம். காலையில் அலாரம் ஒலியின் சத்தம் கேட்டு சிரமப்பட்டு எழுபவர்கள் ஒரு மணி நேரமாவது செல்போனை ஒதுக்கி வைப்பது நல்லது. சமூக ஊடகங்களின் தாக்கம் வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கமாகிவிட்டது என்றாலும் எழுந்ததும் காலை வேளையில் அதனை தவிர்ப்பது அமைதியான சூழலுக்கு வழிவகை செய்யும்.

காலை எழுந்ததும் சில நிமிடங்களை உங்களுக்காக செலவிடுவது மன உறுதிக்கு பயனுள்ளதாக இருக்கும். மனதுக்குப்பிடித்தமான இசையை கேட்பது மனதை அமைதிப்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும். அலுவலகத்திற்கு செல்ல நேரமாகி விட்டதே என்று அவசர அவசரமாக குளிக்கக்கூடாது.

செய்ய வேண்டியவை:

குளிப்பதற்கென்றே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அதனை சரிவர பின்பற்ற வேண்டும். அது மனதை ரிலாக்ஸ் ஆக வைத்துக்கொள்ள உதவும். ஒவ்வொரு நாளும் என்னென்ன விஷயங்களை செய்யப்போகிறோம் என்பது பற்றி முன் கூட்டியே திட்டமிட்டு அட்டவணை தயாரித்து அதன்படி செயல்படுவது நல்லது. குறிப்பெடுத்து எழுதி, நேர மேலாண்மையை கடைப்பிடிப்பது அவசியமானது.

அது சுய விழிப்புணர்வை அதிகரிக்க செய்யும். உடல்நலம் மற்றும் மன நலத்திற்கும் நன்மை தரும். உடற்பயிற்சி, தியானம், யோகாசனம் ஆகிய மூன்றுக்கும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை செலவிடுவது உடல் நலத் துக்கும், மன நலத்துக்கும் இன்றியமையாதது. மன அழுத்தத்திற்கு நடைப்பயிற்சி சிறந்த மருந்து இரவில் நன்றாக தூங்குவதற்கும் உதவி புரியும். காலை வேளையில் ஏதாவதொரு யோகாசனம் செய்வது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

காலை வேளையில் தியானம் மேற்கொள்வதும் சிறப்பானது. தளர்வான நிலையில் உட்கார்ந்து சில நிமிடங்கள் தியானிப்பது தெளிவான மன நிலையை ஏற்படுத்தும். காலையில் வீட்டை விட்டு கிளம்பும்போதே எந்த காரியத்தை முதலில் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அதனை முதலில் நிறைவேற்றிய பிறகே அடுத்த வேலைகளில் கவனம் பதிக்க வேண்டும்.

அவ்வாறு செய்வது மற்ற வேலைகள் காலதாமதம் ஆவதை தவிர்க்க உதவும். காலை உணவை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். காலை வேளையில் சத்தான உணவை சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் வளர்சிதை மாற்றங்களை சீராக்கி உடல் நலம் மற்றும் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கு துணை புரியும்.

Categories

Tech |