தமிழகத்தில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவற்றில் “தமிழகத்தில் அரசியல் திசை வழியை துவங்கி வைத்த முன்னோர்கள் அடியொற்றி, திராவிட நிலத்தில் திராவிட மாடல் அரசில் இளையோனாக இணைய வாய்ப்பளித்த கழகத்தலைவர் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி. கடந்த 2019ம் வருடம் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை அடுத்து ஜூலை 4ம் நாள் கழக இளைஞர் அணி செயலாளராக தலைவர் என்னை நியமித்தார்கள்.
தலைவர் உருவாக்கிய அணி, தாய்க்கழகத்தின் முன்னணிப் படை அணியாக இளைஞர் அணியைத் தலைவர் உருவாக்கி வைத்து இருந்தார். அதற்கு என்னை நியமித்த போதும், இன்றுநான் எதிர்கொள்ளும் விமர்சனங்களை, அழுத்தத்தை அன்றும் உணர்ந்திருந்தேன். மேலும் நம்மை நம்பி தலைவர் அவர்கள் வழங்கிய பொறுப்புக்கு, உண்மையாக வேலை பார்க்க வேண்டும் என்பதை உணர்ந்து இளைஞர் அணி சகோதரர்களுடன் இணைந்து உழைக்கத் துவங்கினோம்.
இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டபோது, சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது நான் எதிர்கொண்ட அதே விமர்சனங்களை அமைச்சர் அறிவிப்பின்போதும் எதிர்கொள்கிறேன். எனினும் விமர்சனங்களை என் செயலால் எதிர்கொள்வேன் என்று அன்று பதிலளித்திருந்தேன். அமைச்சர் பொறுப்பிலும் என் செயல்பாடுகள் வாயிலாக மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.