மெரினா கடற்கரையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.
சென்னை பாலவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம் மற்றும் வீடு வீடாக சென்று நடத்தப்படும் பரிசோதனைகளில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்னையில் தடுப்பூசி செலுத்தவேண்டிய 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் 10 லட்சம் பேர் உள்ளதாகவும். அவர்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்த முன்வந்தால் 10 நாட்களுக்குள் செலுத்த முடியும் என்றும் கூறினார்.
வீடுகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வருபவர்களிடம் பொது மக்கள் ஒளிவு மறைவின்றி ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட மாநகராட்சி ஆணையர் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலம் என்றார். விதி மீறல்களுக்கு அபராதம் வசூலிப்பது வருவாய்க்காக அல்ல என்றும், கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்காக தான் என்றும் அவர் கூறியுள்ளார்.