இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா தொற்று நிலைமை சற்று குறைந்து வருவதால் மீண்டும் அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சலுகை அறிவிப்புகளை மத்திய, மாநில அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைபடி, 2022ம் வருடத்துக்கான அகவிலைப்படி உயர்வு சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பணியில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளரான வெ.இறையன்பு, தலைமை கணக்காயர் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநகராட்சிகளில் வசிக்கும் அரசு ஊழியா்களுக்கு 24 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக வீட்டு வாடகைபடி உயர்த்தி வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் நகராட்சிகளில் வசிப்பவர்களுக்கு 16 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 8 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகவும் வாடகைப்படி உயா்வு அமல்படுத்தப்படுகிறது. இத்தொகையை கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி , வீட்டு வாடகைப் படி உயர்வு தமிழக அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது என்று தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு குறிப்பிட்டுள்ளார்..