சீனாவானது தனியார் பயணிகளுக்கென தன் முதல் வணிக விண்வெளி பயணத்தினை துவங்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. 2025ம் வருடத்தில் செயல்முறைக்கு வரும் என சவுத்சைனா மார்னிங் போஸ்ட் அறிக்கை தெரிவிக்கிறது. “லாங் மார்ச் 11 ராக்கெட்” திட்டத்தின் பொது இயக்குநரும், அரசாங்க ஆதரவுடன்கூடிய வணிக விண்வெளி ஏவுகணை நிறுவனமான CAS ஸ்பேஸின் நிறுவனருமான யாங் யிகியாங்கை அளித்த அறிக்கையின் படி, சீன விண்வெளி சுற்றுலாதுறை என்பது 2025 ஆம் ஆண்டளவில் முழுமையாக வளர்ச்சியடையும். இப்பயணத்திற்காக ஒரு நபருக்கு 2-3 மில்லியன் யுவான் – சுமார் ரூ. 2-3.4 கோடி கட்டணம் ஆகலாம் என யாங் கூறினார். திட்டம் பற்றி விரிவாகக் கூறிய அவர், இன்று பூமி சுற்று வட்டப் பயணம் என்பது மிகவும் வளர்ச்சி அடைந்ததாகவும், பெரும்பாலான நடுத்தர மக்களுக்கு ஏற்றதாக மாறிவருவதாகவும் கூறினார்.
சீன விண்வெளி பயணத்தில் ஒரு நேரத்தில், 7 சுற்றுலாப்பயணிகள் வரை கடல் மட்டத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்து, பிறகு பூமிக்கு திரும்பும் 10 நிமிட பயணம் இது என குறிப்பிட்டார். வணிக விண்வெளி தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க, நிறுவனம் ஏற்கனவே சீன நாட்டின் மிகப் பெரிய அரசுக்கு சொந்தமான பயண நிறுவனமான “சீனா டூரிசம்” குழுமத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பயணிகளை விண்வெளிக்கு அனுப்பும் முன்பு, அடுத்த வருடம் முதல் பல ஆளில்லா விமான சோதனைகளை மேற்கொள்ளும். கடந்த வருடம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எலான் மஸ்க் நான்கு தனியார் பயணிகளை சுற்றுப் பாதைக்கு அனுப்பி வெற்றிபெற்றார்.
அவர்களில் யாரும் தொழில் முறை விண்வெளி வீரர்கள் கிடையாது. விண்வெளி நிலையத்தின் தற்போதைய சுற்றுப்பாதையை விட அதிகமான உயரத்தில் பயணிகள் பறந்ததாக Space X தெரிவித்து இருக்கிறது. பயணகுழுவினர் சுமார் 575 கிமீ உயரத்தில் 3 நாட்கள் பூமியைச் சுற்றிவந்துள்ளனர். மற்றொரு தொழில் அதிபரான ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், இந்த வருடன் ஆகஸ்ட் 4ம் தேதி தன் 6வது மனித விண்வெளிப் பயணத்தை நிறைவுசெய்தது. இஸ்ரோவும் தன் தொழில் முறை விண்வெளி சுற்றுலாவை விரைவில் துவங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்து உள்ளது. காலம் தாழ்ந்தாலும் சீனாவானது தன் இருப்பை விரைவாக நிலைநிறுத்தி வருவதாக அறிக்கை கூறுகிறது. 2017 -2021 வரை ஒவ்வொரு வருடமும் சுமார் 10,000 புது விண்வெளி தொடர்பான நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது என அறிக்கை கூறுகிறது.