Categories
அரசியல்

“அப்படி ஒரு வெல்லத்த அமெரிக்கால கூட கண்டுபிடிச்சிருக்க மாட்டாங்க” ரூ.1000 கோடி ஊழல்….. சிவி சண்முகம் செம காட்டம்…..!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகே நல்லாளம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது அமைச்சர் சிவி சண்முகம் மேடையில் பேசியதாவது, அதிமுக கட்சி முடங்கி விட்டது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடும் ஒரே கட்சி அதிமுக தான். அண்ணா அண்ணா என்று கூறும் திமுக கட்சியினர் ஒரு பொதுக்குழு கூட்டத்தை கூட நடத்தவில்லை.

இதுதான் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம். தமிழகத்தில் இனி வருடம்தோறும் 6% மின்கட்டணம் உயரும். அதோடு பேருந்து கட்டணம் தான் அடுத்ததாக உயரப் போகும் கட்டணம். பேருந்து கட்டணத்தை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதோடு, அதை தனியார் மயமாக்குவதற்கான நடவடிக்கைகளிலும் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. பொங்கல் பரிசில் கொடுக்கப்பட்ட வெல்லத்தை அமெரிக்காவில் கூட கண்டுபிடித்து இருக்க மாட்டார்கள். பொங்கல் பரிசு என்று சொல்லிவிட்டு திமுக ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது. இதை கண்டித்து அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் சொல்லும் பகுதியில் சாலை விரிவாக்க  பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த சாலையின் அருகே இருக்கும் மரங்கள் மற்றும் மின் கம்பிகளை அப்புறப்படுத்தாமலேயே சாலை போடும் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் திராவிட மாடலா? குடும்பம் குடும்பமாக கொள்ளையடிப்பது தான் திராவிட மாடலா? ஒப்பந்ததாரராக இருந்தவரை அமைச்சராக போட்டால் இப்படித்தான் நடக்கும். பத்திர பதிவுத்துறை அமைச்சர் தன்னுடைய வீட்டு திருமணத்தில் 5000 ஆடுகள், கோழிகள் பிரம்மாண்ட மேடை என அமர்க்களப்படுத்தி இருந்தார். இதில் மொய் எழுதுவதற்கு கார்டு ஸ்வீப் செய்யும் 100 மிஷின் வேற பயன்படுத்தினார். இதன் மூலம் 30 கோடி ரூபாய் அவருக்கு கிடைத்துள்ளது. நானும் பத்திர பதிவுத்துறை அமைச்சராக 3 முறை இருந்துள்ளேன்.

ஆனால் அந்த துறையில் இவ்வளவு கொள்ளை அடிப்பார்களா என்பதை இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். ஆட்சி மாறும் என்பதை யாரும் மறந்து விடாதீர்கள். ஆட்சி மாறும்போது எங்களுக்கு பதில் கூற வேண்டிய சூழல் ஏற்படலாம். அப்போது முதல்வர் ஸ்டாலினும், பொன்முடியும் வரமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் சிறையில் தான் இருப்பார்கள். தமிழகத்தில் இந்தப் பகுதியில் கல்குவாரிகள் அதிக அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பகுதியில் இருந்துதான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு எம் சாண்ட் மற்றும் ஜல்லி போன்றவைகள் செல்கிறது.

ஆனால் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து இப்பகுதியில் ஒருவர் கூட கல்குவாரி நடத்த முடிவதில்லை. காரணம் லஞ்சம் கேட்கும் அமைச்சர்கள். அவருடைய கைக்கூலிகள். தற்போது செயல்படும் அனைத்து கல்குவாரிகளும் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் பொன்முடி போன்றவர்களுக்கு சொந்தமானவை. தமிழகம் முழுதும் உள்ள கனிம வளத்தை கொள்ளை அடிக்கிறார்கள். திமுக அரசு பொறுப்பேற்றாலே இப்படித்தான் நடக்கும். இது மட்டுமா கொள்ளை, கொலை போன்றவைகளும் அதிகரிக்க தான் செய்யும்.

இதை கவனிக்க வேண்டிய டிஜிபி சைக்கிள் ஓட்டுகிறார். அவர்தான் ஒருபுறம் சைக்கிள் ஓட்டுகிறார் என்று பார்த்தால் முதல்வர் ஸ்டாலின் மற்றொரு பக்கம் சைக்கிள் ஓட்டுகிறார். இவர்கள் 2 பேருக்கும் பாதுகாப்பு கொடுப்பதற்கே காவலர்கள் போதவில்லை. பின்னர் எப்படி அவர்கள் கொலையாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுப்பார்கள்.‌ வாக்களித்த மக்களுக்கு சிறந்த திட்டங்களை கொடுப்பது திமுக அரசின் நோக்கம் கிடையாது. கொள்ளையடிப்பது மட்டும்தான் அவர்களுடைய நோக்கம் என்றார்.

Categories

Tech |