மீம் கிரியேட்டர் ஒருவர் தனது புதுவீட்டின் கிரகப்பிரவேச விழாவுக்கான அழைப்பிதழையும் மீம் வடிவிலேயே உருவாக்கியிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. நகைச்சுவையுடன் சொல்ல மீம்சை விட்டால் வேறு வழியில்லை. இளைஞர்கள் தங்களது கற்பனை சக்தியினை படுபயங்கரமாக வெளியுலகிற்கு வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இளங்கோவன் என்னும் இளைஞர் ஒருபடி மேலே போய், புதுமனை புகுவிழா அழைப்பிதழை மீம் வடிவிலேயே அச்சடித்திருக்கிறார்.
அங்க என்ன ஒரு புது பில்டிங் இருக்கு” என வடிவேலு – ரஜினிகாந்த் டெம்ப்ளேட் மூலம் துவங்கும் இந்த பத்திரிக்கையில் “அது எங்க வீடுதான். புதுசா கட்டிருக்கோம். அதுக்கு உங்கள இன்வைட் பண்ணத்தான் நான் வந்திருக்கேன்” என ஆரம்பமே அமர்க்களமாகி இருக்கிறது. அதை தொடர்ந்து “காலையில் 6.30 மணிக்கு தான் பால் காய்ச்சுறோம்” எனவும் “6.30 மணிக்கு மேல காய்ச்சுனா பால் காயாதா?” என பிரெண்ட்ஸ் பட டெம்பிளேட்டில் பக்காவாக சொல்ல வந்த விஷயத்தை சொல்லியிருக்கிறார் இளங்கோவன்.
அதைத் தொடர்ந்து விருந்து நடைபெறும் எனவும் மீம் மூலமாகவே குறிப்பிட்டிருக்கும் அவர், தனது வீட்டுக்கான முகவரியை சொல்லிய விதம் நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது. அதில்,”அப்பனே முருகா, விசேஷத்துல எல்லோரும் வயிறார சாப்பிட்டு, மெய் சிலிர்த்து பை நிறைய மொய் வச்சா, உனக்கு நெய் அபிஷேகம் பண்றேன்னு பொய் சொல்லாம, தினமும் உன் கோவிலுக்கு வந்து புளியோதரையும் சுண்டலும் சாப்பிட்டு போறேன்” என குறிப்பிட்டிருக்கிறார் இளங்கோவன்.