தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நகராட்சி தேர்தலில் வெற்றியை ஈட்ட வேண்டும். 8 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த திமுக அரசு மக்களின் மத்தியில் அவப்பெயர் வாங்கிவிட்டது. நிர்வாகத் திறமையின்மையாலும் திமுக அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் . கடந்த அதிமுக ஆட்சியின்போது நடந்த இயற்கை பேரிடர்களான மழை, வெள்ளம் மற்றும் கொரோனா பரவலின் போது மக்களுக்கு நேரடியாக சென்று நடவடிக்கைகள் எடுத்தோம்.
ஆனால் தற்போதைய திமுக அரசு எந்த உருப்படியான காரியமும் செய்யவில்லை. தீவிர கொரோனா காலத்தில் டெல்லியில் சிக்கியிருந்த 900 முஸ்லிம்களை தமிழகத்திற்கு அழைத்து வர சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்திருந்தோம். அதோடு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தகுந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அம்மா உணவகங்களில் இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டன. ஆனால் திமுக அரசு இவ்வாறான நலத் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. அதோடு திமுக வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி நாடே அறியும். அவற்றையெல்லாம் கூறி நீங்கள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கண்டிப்பாக நான் தான் வெற்றி பெறுவோம் அதில் எந்த ஐயப்பாடும் இல்லை.!” இவ்வாறு அவர் கூறினார்