சட்டமன்ற தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கண்ட மாபெரும் தோல்வி சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கு ஒரு அச்சாரமாக அமைந்தது. தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தின்போது ஓபிஎஸ் வெளிப்படையாகவே சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி ஏதேதோ கூறி தடுத்து நிறுத்திவிட்டார். சசிகலா நுழைந்தால் நாம் இருவருக்கும் மதிப்பு இல்லாமல் போய்விடும் எனவே அவரை கட்சிக்குள் அனுமதிக்க வேண்டாம் என ஓ பன்னீர் செல்வத்திடம் எடப்பாடி பழனிசாமி கூறி சமாதானம் செய்ததாக பேசப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
இதில் ஆஜரான ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர் “சின்னம்மா மீதான குற்றச்சாட்டுகளை போக்கவே இந்த ஆணையத்தை தான் ஏற்படுத்தியதாகவும், தனிப்பட்ட முறையில் சின்னம்மா மீது தனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளதாகவும் கூறினார்.” சசிகலா என்ற பெயரை கூட உபயோகிக்காமல் அவர் சின்னம்மா எனக்கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருள் ஆகியது. இந்நிலையில் ஜெயலலிதாவின் வீட்டில் சமையல்காரராக இருந்த ராஜம்மாள் கடந்த 27 ஆம் தேதி காலமானார். அப்போது துக்கம் விசாரிக்கச் சென்ற சசிகலா மற்றும் ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் இருவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது சசிகலா ஓ. பன்னீர் செல்வத்தின் மகனிடம் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பா உண்மையை கூறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இதனை அப்பாவிடம் கூறிவிடு.” எனக் கூறியுள்ளார்.