ராஜஸ்தானில் பிரசவத்தின் போது பெண் ஒருவர் இறந்ததால் மருத்துவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த மருத்துவர் அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் அர்ச்சனா. தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். அவரது மருத்துவமனையில் சமீபத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்தார். இதற்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என்று கூறிய பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து மருத்துவரான அர்ச்சனா மீது ராஜஸ்தான் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த மார்ச் 29 அன்று மருத்துவர் அர்ச்சனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அதில் அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள் என்று எழுதி வைத்திருந்தார். மேலும் எனது கணவரையும், குழந்தைகளையும் நான் மிகவும் நேசிக்கிறேன். என் மரணத்திற்கு பின்பு அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை. யாரையும் கொல்லவில்லை. எனது மரணம் நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்கும், லவ் யு…. அம்மா இல்லாத குறையை குழந்தைகளுக்கு உணர விடாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.