மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணின் துப்பட்டா எதிர்பாராதவிதமாக சக்கரத்தில் சிக்கியதால் , அப்பெண் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள மேலமடை என்ற ஊரைச் சேர்ந்தவர் பெயிண்டர் முருகேஷ். இவர் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் தனது மகள் அனிதாவை (18) சிகிச்சைக்காக அழைத்து சென்றிருந்தார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக அனிதாவின் துப்பட்டா மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கியது.
இதில் அனிதா தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிய அவரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சக்கரத்தில் துப்பட்டா சிக்கி இளம்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.