புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார் சார்பாக அவரது தந்தை ராஜேந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2016-ம் வருடம் என்னுடைய மகன் தினேஷ் குமாருக்கும், அபிநயா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அவர்களுக்கு ஹர்ஷித் குமார் (5) என்ற மகன் உள்ளான். இந்நிலையில் தினேஷ்குமார் அபுதாபியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததால் அவருடைய மனைவி மற்றும் மகனுடன் அங்கேயே வசித்து வந்தார். இதனையடுத்து அபிநயா உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார். இது குறித்து அவருடைய பெற்றோருக்கு நன்றாகவே தெரியும்.
இதனை தொடர்ந்து கடந்த 7.6.2022 அன்று அபிநயா வீட்டில் தனியாக இருக்கும்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் அவரது உடலை அபுதாபி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்தது உறுதியான பின் அபிநயாவின் உடலை எனது மகனிடம் ஒப்படைத்துள்ளனர். அபிநயாவின் உடலுடன் தினேஷ் மற்றும் அவரது மகன் போன்றோர் விமானம் மூலமாக திருச்சிக்கு வந்த போது தினேஷை தாக்கி அபிநயாவின் உறவினர்கள் ஹர்ஷித்தையும் அவரது பாஸ்போர்ட்டையும் பறித்துக்கொண்டனர். இதனையடுத்து ஹர்ஷித்தை எங்களிடம் ஒப்படைக்கும்படி புகார் அளித்தும் எந்தவித பலனும் இல்லை. அதனால் ஹர்ஷித்தை எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிடவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர் மோகன் போன்றோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது சிறுவன் ஹர்ஷித்குமார் மற்றும் தினேஷ் கோர்ட்டில் ஆஜராகியுள்ளனர். அப்போது நீதிபதிகள் அந்த சிறுவனிடம் யாருடன் செல்ல விரும்புகிறாய் என கேட்டனர். அதற்கு அவன் தந்தையுடன் செல்வேன் என்பதை கைகாட்டி கதறி அழுதான். தினேஷும் தன்னுடைய மகனை பார்த்து கண் கலங்கியபடி நின்றுள்ளார். இதற்கு அபிநயாவின் உறவினர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மனம் இறங்கிய நீதிபதி சிறுவன் ஹர்ஷித் குமாரை அவரது தந்தை தினேஷிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.