சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் சீமாத்தமன் நகரில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் சர்மி(12) அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8- ஆம் வகுப்பும், மகன் கமலேஷ் 2- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்து சர்மி தனது தந்தையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தம்பி சரியாக படிக்காததால் நான் அவனை அடித்துவிட்டேன் என கூறியுள்ளார். இதனையடுத்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த முருகன் தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக தனது மகளை அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சர்மியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பி சரியாக படிக்கவில்லை என அவனை அடித்ததால் தாயார் வந்து தன்னை அடிப்பார் என்ற அச்சத்தில் சிறுமி தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.