Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அப்போ நீங்க டாக்டர் இல்லையா…? சோதனையில் வசமாக சிக்கியவர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

சான்றிதழ் எதுவும் இல்லாமல் பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வயலூர் பகுதியில் முருகன் தவமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரியபட்டி பகுதியில் ஒரு கிளினிக்கை தொடங்கி கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பொதுமக்களுக்கு பொது மருத்துவ சிகிச்சை அளித்துள்ளார். இந்நிலையில் பூளவாடி பகுதியில் வசிக்கும் சரஸ்வதி என்ற 60 வயது மூதாட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனின் கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அதன் பிறகு தான் சரஸ்வதியின் உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது.

இதனை அடுத்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரஸ்வதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் முருகன் தவமணி அளித்த சிகிச்சை மீது சரஸ்வதியின் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் திருப்பூர் மாவட்ட இணை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து அவரின் உத்தரவின்படி குடிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரபாண்டியன் முருகனின் கிளினிக்கிற்கு சென்று ஆய்வு செய்தபோது மருத்துவ சான்றிதழ் எதுவும் இல்லாமல் போலி மருத்துவம் பார்த்தது தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் குடிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கிளினிக்கில் இருந்த மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்து போலி டாக்டர் முருகன் தவமணியை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் எம்.காம் பட்டப்படிப்பை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துவிட்டு, ஒரு தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது. அந்த அனுபவத்தை வைத்து தான் முருகன்  பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |