தமிழில் கார்த்தி உடன் சுல்தான் திரைப்படத்தில் நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடிக்கிறார். இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு புஷ்பா திரைப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகிய சீதாராமம் படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடிப்பு பேசப்பட்டது.
தற்போது ராஷ்மிகாவுக்கு கைநிறைய பணம் இருக்கிறது. கர்நாடகாவில் அவர் நிறைய சொத்துகள் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அவரது வீட்டில் வருமான வரி சோதனையும் நடந்தது. இந்நிலையில் சிறுவயதாக இருக்கும் போது நிலவிய பண கஷ்டங்கள் குறித்து ராஷ்மிகா பகிர்ந்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பேட்டி அளித்ததாவது, ”என் சிறு வயதில் பெற்றோர் பண நெருக்கடியில் மிகவும் கஷ்டப்பட்டனர். அப்போது அவர்கள் கையில் பணம் இருக்காது. இதனால் குடும்பத்தில் கஷ்டம் ஏற்பட்டது. வீட்டுவாடகை கொடுக்கவும் பணம் இன்றி சிரமப்பட்டோம். இருமாதங்களுக்கு ஒரு முறை வீடு மாறும் அளவிற்கு கஷ்ட நிலைமை இருந்தது. பெற்றோரால் எனக்கு ஒரு பொம்மைகூட வாங்கி தர இயலவில்லை” என்று உருக்கமாக கூறினார்.