தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உரிய ஆவணம் இன்றி அமமுக பிரமுகர் கொண்டு வந்த ஒன்றரை லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஆறுமுகநேரி நல்லூர் விலக்கருகே தாசில்தார் சுப்ரமணியன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டபோது, உரிய ஆவணம் இன்றி 1லட்சத்து 58 ஆயிரத்து 800 ரூபாய் எடுத்து வரப்பட்டது தெரியவந்துள்ளது.
விசாரணையில் அவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பதும், ரியல் எஸ்டேட் தொழிலுக்காக கொண்டு செல்வதும் தெரியவந்தது. பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.