நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ்,ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது நேரடியாக சீட் கேட்கும் போதே என் சமுதாயம் சார்ந்து 12அம்ச கோரிக்கை வைத்தேன். எப்பொழுது இங்கு வந்தாயோ… அப்பொழுதே அது உனக்கு கிடைத்ததுபோல் தானே அர்த்தம் என்று அவர்கள் சொன்ன வார்த்தையை நம்பித்தான் நான் இருந்தேன். அவர்கள் திடீரென்று அகால மரணம் அடைவார்கள் என்று யார் நினைத்து பார்த்தார்கள்.
அதற்கு பிறகாக இந்த அரசாங்கத்திடம் நான் தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறேன்.பிஜேபி கட்சியைச் சார்ந்தவர்களிடம் பேசியபொழுது டெல்லியிலே வந்து அமித்ஷாவை சந்திக்க சொன்ன பொழுதெல்லாம்…. நான் என்னுடைய சமுதாயம் சார்ந்த இந்த இடஒதுக்கீட்டையும்,
விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்கின்ற கோரிக்கை ஏற்பீர்களா ? அந்த கோரிக்கையை நீங்கள் ஏற்பீர்கள் என்றால்…. நான் நேரடியாக வந்து சந்திக்கிறேன் என்று தான் சொல்லியிருக்கிறேன்.
ஆகவே , தொடர்ந்து நான் அரசியல்வாதி இல்லை…. நான் சமுதாய வாதி தான் என்பதை சட்டமன்றத்திலே பதிவு செய்தவன் நான். எங்களுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது, புறம் தள்ளப்பட்டிருக்கிறது, உதாசினப்படுத்தப்பட்டு இருக்கிறது. சின்ன சின்ன சமுதாய மக்களுடைய கோரிக்கைகளை உற்று நோக்குகின்ற இந்த அரசு, இந்த பெருத்த சமுதாயத்தினுடைய கோரிக்கைகளை உதாசீனப் படுத்துவது, அவமானப்படுத்துவது என்ற நிலை தான் நாங்கள் இந்த நிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டுள்ளோம் என கருணாஸ் தெரிவித்தார்.