Categories
தேசிய செய்திகள்

அமித்ஷாவை பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் அமளி – நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை 12 மணி வரையும், மாநிலங்களவை 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி கடந்த மாதம் 11ம் தேதி முடிவடைந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடந்து வந்தது. கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பட்ஜெட் தொடரின் 2-வது கூட்டம் நேற்று தொடங்கியது. அப்போது டெல்லி வன்முறை குறித்து எதிர்க்கட்சிகள் அமித் ஷாவை ராஜினாமா செய்யக் கோரி கோஷமிட்டனர். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை மீண்டும் மக்களவை, மாநிலங்களவை கூடியது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரை அமைதியாக நடத்துவது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்தார். எனினும் டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் கூறினர். இதனை எதிர்த்து பாஜக எம்பிக்கள் வாக்குவாதத்தில் எடுப்பதால் அவையில் கூச்சல் நிலவியது. எனவே எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை 12 மணி வரையும், மாநிலங்களவை 2 மணி வரையும் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |