வெளிமாநில தொழிலாளர்கள் அடுத்தடுத்து படுகொலை, தீவிரவாதிகள் மீதான பாதுகாப்பு படையின் தொடர் என்கவுண்டர் போன்ற பரபரப்புக்கு மத்தியில் மூன்று நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் சென்றுள்ளார். காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடி பிடித்து சுட்டுக் கொன்று வருகின்றனர்.
தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையேயான மோதலில் இதுவரை 9 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த பரபரப்பான சூழலில் மூன்று நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் சென்றுள்ளார். ஸ்ரீநகரில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது காஷ்மீரில் தொடர்ந்து வரும் என்கவுண்டர்கள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கங்களை கேட்டு அறிந்தார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகார அரசியல் அமைப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக அமித் ஷா காஷ்மீர் சென்றுள்ளதால் ஸ்ரீநகரில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் 3 நாட்கள் தங்கி இருக்கும் அமித்ஷா ஸ்ரீநகரில் இருந்து சார்ஜாவுக்கான நேரடி விமான சேவையை தொடங்கி வைக்கிறார். பின்னர் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறும் அவர் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அடிக்கல்லை நாட்ட உள்ளார். இந்நிலையில் அமித்ஷா வருகைக்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் 700 பேரை பாதுகாப்பு படையினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர்கள் ஜம்மு -காஷ்மீருக்கு வெளியே இருக்கும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்தைகைய அடக்குமுறை நடவடிக்கைகள் ஜம்மு-காஷ்மீரில் பதற்றத்தை மேலும் அதிகரித்து இருப்பதாக மெகபூபா கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுவது குறித்து பதிவிட்டுள்ள மெகபூபா ஏற்கனவே யூபிஎ அரசால் 12 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருவதை சுட்டிக் காட்டியிருக்கிறார். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் குழப்பத்தில் தள்ளபட்டுள்ளதாகவும் மெகபூபா விமர்ச்சித்துள்ளார்.