மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து அதனை சட்டமாக்கியுள்ளது. இந்த திருத்தச் சட்டம் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிலுள்ள இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மை அகதிகளுக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது.
ஷாகீன்பாக் போராட்டம்
இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுக்க போராட்டம் நடந்துவருகிறது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் டெல்லியில் போராட்டம் தொடர்கிறது.
டெல்லி ஹாகீன்பாக் பகுதியில் கடந்தாண்டு டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடந்துவருகிறது.
இந்த போராட்டக்குழுவினர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என திக் விஜய் சிங் வலியுறுத்தியுள்ளார்.
திக் விஜய் சிங் கருத்து
இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “ஷாகீன்பாக் போராட்டக்காரர்களை அமித் ஷா சந்திக்கிறார். நீங்கள் மூன்று முடிவுகளை எடுத்தால், நாட்டில் அமைதி நிலைக்கும். அதாவது, குடியுரிமை திருத்தச் சட்ட (சி.ஏ.ஏ.) விவகாரத்தில் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்டவைகளை திரும்ப பெறுங்கள். அல்லது மோகன் பாகவத்தின் அகமதாபாத் கருத்தை பின்பற்றி ராஜினாமா செய்யுங்கள்” என தெரிவித்துள்ளார்.
ஆதரவு-எதிர்ப்பு
ஷாகீன் பாக் போராட்டக்குழுவினருடன் அமித் ஷா சந்திக்கும் நிகழ்வுக்கு, போராட்டக்குழுவிலுள்ள ஆசீப் தொபானி என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “போராட்டத்தில் ஏராளமான வயதானவர்கள் ஈடுபட்டுள்ளனர், ஆகவே அமித் ஷா இங்கு வந்து பார்க்கட்டும்” என்கிறார் அவர்.
ஆசீப் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்குழுவிலுள்ள பெண்கள் கூறும்போது, “இதுபற்றி முடிவெடுக்க அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? குடியுரிமை திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும். அவரை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றனர்.