முதல் உலகப்போர் காலத்தில் கட்டப்பட்ட பதுங்குக்குழி ஒன்று அமெரிக்கன் கல்லூரியில் கண்டறியப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் பழமை வாய்ந்த கல்லூரிகளில் ஒன்றாக அமெரிக்கன் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் படித்தவர்கள் சினிமா துறையில் சிறந்து விளங்கி வருகிறார்கள். மற்றும் பல்வேறு துறைகளிலும் பெரிய பொறுப்புகளில் இருந்து வருகின்றார்கள். இந்தக் கல்லூரியில் உள்ள கட்டிடங்கள் பழங்காலத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.
இக்கல்லூரியில் 1912ல் கட்டப்பட்ட ஜேம்ஸ் கால் அரங்கின் கட்டிடத்தின் கீழ் உள்ள ஒரு அறையை பல வருடங்களாக பழைய பொருட்களை சேகரித்து வைக்கும் இடமாக பயன்படுத்தி வந்தனர். இந்த இடத்தை கல்லூரி நிர்வாகம் சுத்தம் செய்தபோது அந்த அறை பதுங்குக்குழி வடிவில் இருந்தது. அதற்கு ஒரு நுழைவு பகுதியும் அதிலிருந்து வெளியேற நான்கு வழிகளும் இருப்பதையும் பார்த்து பிரமித்து போன கல்லூரி நிர்வாகிகள் வரலாற்று ஆய்வாளர்களை அழைத்து வந்து ஆய்வு செய்த போது அது பதுங்குக்குழி என்று உறுதி செய்தனர்.
இதுபற்றி கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் கூறியதாவது, சுத்தம் செய்த அந்த பழைய கட்டிடத்தில் உள்ளே ஒரு பாதையும் வெளியே ஒரு பாதையும் என்று தனித்தனியாக இருந்ததுமே அது பதுங்குக்குழியாக தான் இருக்கும் என்று நினைத்தோம். முதலாம் உலகப்போர் காலத்தில் கட்டிய அனைத்து கட்டிடங்களும் பதுங்குக்குழி வைத்துதான் கட்டப்படுகிறது. பதுங்குக்குழி என்பது மக்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொண்டோம்.
இந்த பதுங்குக்குழியானது மூன்று அறைகளைக் கொண்டதாகவும், 32 அடி உயரம் கொண்ட கட்டிடத்தை தாங்கும் வகையில் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஓலைச்சுவடி, நாணயம், மரங்களின் ஆயுள் காலம், மனித எலும்புக்கூடு எல்லாவற்றையும் வைத்து அருங்காட்சியமாக பொதுமக்கள் பார்வைக்கு விரைவில் கொண்டுவரப்படும் என்று அவர் கூறியுள்ளார்.