அமெரிக்காவில் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 15ஆம் தேதி இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலினால் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில் சீன ராணுவத்தில் 35 பேருக்கு மேல் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா-சீனா இடையே பதற்றமான சூழல் உருவாகி உள்ளதை தொடர்ந்து இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக கூறி டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில் இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடைவிதிக்கும் முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறுகையில், “டிக்டாக் போன்ற செயலிகள் மூலம் சீனா பயனாளர்களின் தகவல்களை உளவு பார்க்கிறது. இதனால் சீனப் செயலிகளை தடை செய்வது குறித்த ஆலோசனைகள் நடந்து வருகின்றது. விரைவில் அது பற்றிய தகவலை அதிபர் ட்ரம்ட்ரம்ப் தெரிவிப்பார்” என கூறியுள்ளார். அமெரிக்காவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டால் 46 மில்லியன் பயனர்களை டிக் டாக் நிறுவனம் இழக்கக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.