அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் வறுமையில் வாடுவதாக ஆய்வின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது
வல்லரசு நாடான அமெரிக்காவில் இந்தியர்கள் 42 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 6.5 சதவீத இந்தியர்கள் கடுமையான வறுமையில் வாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தொற்று பரவிவரும் தற்போதைய காலத்தில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸின் பால் நிட்ஜ் ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸின் சேர்ந்த ஜஷான் பஜ்வாட் மற்றும் தேவேஷ் கபூர் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அமெரிக்காவில் வாழும் இந்திய மக்களில் வறுமையினால் வாடுபவர்கள் பற்றிய ஆய்வின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. அதில் பஞ்சாபியர்கள் மற்றும் வங்காளிகள் ஏராளமானோர் வறுமையினால் வாடுகின்றனர் என்று தேவேஷ் கபூர் கூறியுள்ளார். இவர்களில் ஐந்தில் ஒருவர் அமெரிக்காவில் குடியுரிமை இல்லாதவர்கள்.
மூன்றில் ஒரு பகுதியினர் உழைப்பதற்கான சக்தி இல்லாமல் இருப்பவர்கள். இண்டியாஸ்போரா நிறுவனத்தை சேர்ந்த ரங்கசாமி இதுபற்றி கூறுகையில், “ஆய்வில் வெளியான அறிக்கையின் அடிப்படையில் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் அமெரிக்க இந்தியர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம்” என கூறினார். ஆனால் அமெரிக்காவில் இருக்கும் ஸ்பானிய அமெரிக்கர்கள் மற்றும் கருப்பினத்தவர்களை ஒப்பிடும் போது இந்தியர்களின் நிலை பரவாயில்லை என்று கூறவேண்டும்.