அமெரிக்காவின் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பள்ளிக்கூடங்களை திறக்கும்படி அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அளித்துள்ள தகவலின்படி, அமெரிக்காவில் தற்போது 53,59,748 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 1,69,463 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் பள்ளிக்கூடங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நாங்கள் திறக்க போகிறோம் என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ” குழந்தைகள் பல நேரங்களில் குறைந்த அளவிலான அறிகுறிகளையே கொண்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவம் சார்ந்த சிக்கல்கள் எதுவும் ஏற்படுவது என்பது உண்மையில் மிக அரிதானது. குழந்தைகள் பள்ளிகளுக்கு திரும்பவில்லை என்றால், அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்” என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், தேர்தல் பிரசாரத்திற்கு நாட்டின் பொருளாதாரம் மேம்படும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நெருக்கடியான நிலையில் டிரம்ப் இருக்கின்றார்.
அதனால் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சூழ்நிலையிலும் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகம் பள்ளிக்கூடங்களை விரைவில் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி கொண்டிருக்கிறது. ஆனால் கல்லூரிகள் திறக்கப்பட்டதால் 151 பேருக்கும், பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதால் 71 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.