அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதால் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பாதிப்பிலும், பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. எனினும் அந்நாட்டில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசியளிக்கும் திட்டம் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அங்கு தொற்று குறைய தொடங்கியிருக்கிறது.
அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி நாட்டின் மொத்த மக்கள் தொகையில், தற்போது வரை 30.5% (10 கோடி) மக்கள் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் முழுமையாக செலுத்தியுள்ளதாக, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் மொத்த மக்கள் தொகையில் 43.6% (10,44,00,000) மக்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.