அமெரிக்க ராணுவ படையினர் தங்கியிருந்த அமைப்பின் மீது ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ படை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து அமெரிக்கா ராணுவமும் பதிலடி கொடுத்து வருகின்றது. இதையடுத்து பிப்ரவரி 15ஆம் தேதி ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ படையின் மீது ராக்கெட் குண்டுகளை வீசி ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலர் காயமடைந்தனர்.
இதுவரை அறியப்படாத ஷியா பிரிவின் பயங்கரவாத அமைப்பான சிரியா அவுலியா அல்டாம் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. மேலும் ஈரான் ஆதரவாளருடன் இந்த அமைப்பு தொடர்புடையது. இதையடுத்து அமெரிக்கப் படையினர் ஈராக்கின் எல்லையில் உள்ள சிரியா நாட்டின் புகாமல் நகரில் விமான தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் 17 ஈரான் ஆதரவாளர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜோ பைடன் அதிபராக பதவியேற்று முதல் ஒப்புதல் அளித்த ராணுவ தாக்குதலாகும், எனவே இது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஈராக்கில் உள்ள அமெரிக்க வீரர்கள் தங்கியிருந்த அமைப்பு மீது ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது. இதில் பத்து ஏவுகணை வீசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதில் உயிர் சேதம் ஏதும் இல்லை என்றும் மாகாணத்தின் விமான தளத்தில் இந்த தாக்குதல் நடந்ததாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.