அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.70 லட்சத்தை எட்டியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் உலக அளவில் 13.6 கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் 5,86,000 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கின்றது. அந்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 54 லட்சத்தை எட்டி இருப்பதாக கூறியுள்ளது. அதே சமயத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1,70,019 ஆக உயர்ந்துள்ளது. அதில் அதிகபட்சமாக நியூயார்க்கில் 32,840 பேர் பலியாகியுள்ளனர். அதனைத் தொடர்ந்து நியூஜெர்ஸியில் 15,912 பேரும், கலிபோர்னியா மற்றும் டெக்சாஸ் மாகாணத்தில் 10,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.