கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் கூட்டு இராணுவப் பயிற்சியை தொடங்கியுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் பணியில் பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் கொரோனாவால் மிகவும் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ள அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் கொரிய எல்லையில் கூட்டு ராணுவப் பயிற்சியை தொடங்கி இருக்கின்றன. உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது.
அதுபோன்றே தென்கொரியாவில் கொரோனவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இரு நாட்டு ராணுவமும் கொரிய எல்லையில் வருடாந்திர ராணுவ பயிற்சியை தொடங்கியிருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதம் இருநாடுகளும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக மார்ச் மாதம் நடக்க வேண்டிய கூட்டு ராணுவ பயிற்சி ரத்து செய்யப்பட்டது. அதுபோன்றே ஆகஸ்ட் மாத கூட்டு ராணுவப் பயிற்சியும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த பயிற்சியை தொடங்கி இருக்கிறது. கணினி உருவகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த பயிற்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்க இருந்தது. ஆனால் அந்த ராணுவ பயிற்சியில் ஈடுபடும் தென்கொரிய ராணுவ அதிகாரி ஒருவருக்கு கோரோணா உறுதி செய்யப்பட்டதால் அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் நேற்று இந்த கூட்டு ராணுவ பயிற்சி தொடங்கியுள்ளது. மேலும் இந்த பயிற்சியை வருகின்ற 28ஆம் தேதி வரையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி இந்த கூட்டு ராணுவ பயிற்சி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ராணுவ தளங்களில் கோரோணா பரவாமல் இருக்க இந்த மாத இறுதி வரை இராணுவ வீரர்கள் விடுமுறையில் செல்வதற்கு தென்கொரிய ராணுவம் தடை விதித்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு வடகொரியா தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றது. ஏற்கனவே வடகொரியா மற்றும் தென்கொரியா இடையேயான மோதலில் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தக் கூட்டு ராணுவ பயிற்சி அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.