அமெரிக்க நாட்டில் சென்ற 2020ஆம் வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிப் பெற்றார். அவரது வெற்றியை உறுதிசெய்து சான்று அளிப்பதற்காக சென்ற வருடம் ஜனவரிமாதம் 6ஆம் தேதி நாடாளுமன்றம் கூடியது. அப்போது தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது, 5 பேர் பலியாகினர். நாட்டையே அதிரவைத்த இச்சம்பவம் குறித்து அமெரிக்க நாடாளுமன்றம் தனிகுழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த குழு இதுவரையிலும் நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் மகளும், வெள்ளை மாளிகை முன்னாள் உதவியாளருமான இவாங்கா டிரம்ப் நேற்று முன்தினம் நாடாளுமன்ற குழுவின் முன் விசாரணைக்கு ஆஜரானார்.
காணொலி காட்சி மூலமாக ஆஜராகிய அவரிடம் அதிகாரிகள் சுமார் 8 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். அதாவது கலவரம் குறித்து அவரிடம் பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர் முறையாக பதில் அளித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்பாக சென்ற வாரம் இவாங்கா டிரம்பின் கணவர் ஜெரெட் குஷ்னரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.