உலகம் முழுதும் கொரோனா வைரஸ் தொடர்ந்து வீரியத்துடன் பரவி வருகிறது. இதன் காரணமாக கொரோனா வழிகாட்டுதல்களை உலகநாடுகள் பின்பற்றுவதை தவிர்க்ககூடாது என்று உலக சுகாதார அமைப்பும் வலியுறுத்தி வருகிறது. சாமானிய மக்கள் முதல் பெரும் உலகதலைவர்கள் வரை கொரோனா பாதிப்புக்கு ஆட்படாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் அதிபரான ஜோபைடனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
லேசான அறிகுறிகளுடன் ஜோபைடனுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதனால் தனிமைப்படுத்துதலில் இருந்தவாறு தன் பணிகள் அனைத்தையும் ஜோபைடன் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்டுள்ள ஜோபைடன், 2 முறை பூஸ்டர் டோஸ் தடுப்பூசியையும் போட்டுகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஜோபைடன் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தான பாக்ஸ்லோவிட் மாத்திரையையும் போட தொடங்கி இருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.